தந்தை மகன் உரையாடல்!
மகன்:எனங்கப்பா எப்புடி இருக்கீங்க, மழை எதாவது பேஞ்சுதா?
தந்தை: நாங்க நல்ல இருக்கோம், நீ எப்புடி கண்ணு இருக்குற?, மழை ஏதும் காணோம், வயக்காட்டுல அவுரி போட்டிருக்கோம், தோட்டத்துல நெல்லு நாத்து விட்டிருக்கோம் , ஆத்துலயும் தண்ணி இல்ல, அணையிலும் தண்ணி நாப்பது அடிதான் இருகுதாம, இந்த வருஷம் வயலடிச்சு நெல்லு அருக்கறதுக்குள்ள நாக்கு தள்ளி போகும் போல!
மகன்: ஆத்துல ஊத்து போட்டு தண்ணி பாச்ச முடியாதுங்களா? பம்பு செட்டு வெச்சு பாக்கலாமா?
தந்தை: பம்பு செட்டு எல்லாம் வெச்சா முட்டுவுளிக்கு (முதலீடு) கூட கட்டாது, எதோ மழ வந்தா பாக்கலாம், இல்லாட்டி இந்த தடவ அவுரி காஞ்சுபோக வேண்டியதுதான்!
இது ஒரு தொலை தூரத்தில் வாழும் மகனுக்கும், விவசாய தந்தைக்கும் நடக்கும் உரையாடல்!
பருவ மழை பொய்த்து போகும் போது ஒவ்வொரு விவசாயின் புலம்பல் இது.. !
வருடம் முப்போகம் விளையும் தஞ்சை தரணியிலே ஒரு விவசாயி எலிக்கறியும், அது கிடைகதவர்கள் உயிரை மாயிப்பதும் கொடுமையிலும் கொடுமை.
ஒரு கிலோ அரிசி 30 ருபாய் கொடுத்து வாங்கும் பொதுசன மக்கள் முதல், விவசாயிடம் நெல் கொள்முதல் செய்யும் தரகர் வரை எல்லோரும் சுவையான உணவு உண்ணும் பொழுது அந்த விவசாயி மட்டும் எலிக்கறியும், ஒருவேளை கஞ்சியும் குடிப்பது வேதனை தரும் விஷயம் அல்லவா?
சுவையான பலகாரமும், புத்தாடையும் அணிந்து தீபாவளி கொண்டாடும் பொழுது எத்தனை பேர் இந்த துரதிஷ்ட விவசாயியை நினைத்து பார்த்திருப்போம், வானம் மிளிரும் பட்டாசு கொளுத்தும் பொழுது எத்தனை பேர் நினைத்து பார்த்திருப்போம் இது ஒரு விவசாயின் வெள்ளாமையில்(உழவு) நெருப்பு வெயிக்கும் செயல் என்று?இனிய இந்தியாவில் எத்தனையோ கிராமங்கள் பட்டாசு வெடிக்காமல் அமைதி தீபாவளி கொண்டாடும் போதும் நகரத்திலுள்ள நாம் மட்டும் ஏனோ அதை நினைத்து பார்க்கவில்லை !!
ஊருக்கெல்லாம் படியளக்கும் ஒரு விவசாயி, தன் மகனை படிக்கவைக்க முடியாமல் , தான் பார்க்கும் விவசாயத்தையும் தொடர முடியாமல் தினம் தினம் உயிருடன் சாகும் குடும்பங்கள் ஏராளம்.
எப்படி ஒருவரின் கல்விக்கு உதவுவது உண்ணதமோ, அது போன்று ஒரு விவசாயின் துயர் துடைக்க உதவுவதும் உண்ணதமே!
பங்கு சந்தையில் முதலீடு செய்யும் நீங்கள், ஒரு மாறுதலுக்கு ஏன் ஒரு விவசாயியை நம்பி முதலீடு செய்யக்கூடாது?
தங்களுடைய முதலீட்டை திருப்பி தர விவசாயி தன் உயிரை குடுத்து பாடுபடுவான். லாபம் பெற்றால் தங்களுடன் தனது பெரிய பங்கை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்வான்!!
இயற்கையின் சீற்றத்தால் அவனால் தங்களுடைய முதலீட்டை திருப்பி தர இயலாவிட்டால் அதை பெருந்தன்மையோடு விட்டுகொடுங்கள்!